நிதி அமைச்சர் செயலாளர் மஹிந்த சிறிவரதனவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அரசன் சேவை முடங்கும் அல்லது வீழ்ச்சியடையும் நிலை ஏற்படக்கூடும் என அரச மற்றும் மாகாண அரசுசேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதி சந்தன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்
நிதி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்த சுற்றறிக்கையில் சம்பளம், கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு என்ற தலைப்பின் கீழ் குறிப்பாக மாதாந்த மேலதிக கொடுப்பனவின் மொத்த தொகையானது அடிப்படை சம்பளத்தை விட அதிகரிக்காமல் இருக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தை விடவும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென நிதி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு சேவையில் சுமார் நூற்றுக்கு 75 சதவிதமானோர் இந்த மேலதிக கொடுப்பனவு விடயத்தில் வருவதில்லை. ஆசிரியர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மாகாண அரச சேவையில் ஈடுபடும் துறைசார் அதிகாரிகளும் இந்த மேலதிக கொடுப்பனவு வகைக்குள் வருவதில்லை.
சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பொதுமக்கள் சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு விடயத்துக்குள் உள்ளடங்குகின்றனர்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் அந்த சேவையை உரிய முறையில் வழங்குவதற்கான ஆரணி இன்மை காரணமாக மேலதிக நேரம் வேலை செய்யவேண்டிய நிலை உள்ளது.
அரசாங்கம் அவசியமான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். நியமனங்களை வழங்க வேண்டும். வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்.
அடிப்படை சம்பளத்தை விடவும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கக் கூடாதெனில் அந்த அடிப்படை சம்பளத்தின் அளவுக்கு அமையவே மேலதிக நேர பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறான நிலையில், அரச ஊழியர்களின் உரிமை அல்லது சலுகைகளை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். குறித்த சுற்றறிக்கையை மீளப் பெற வேண்டும் - என்றார்