சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு - அமைச்சர் ரமேஷ் பத்திரண
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவை ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறைசார் தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (16) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35 000 ரூபா கொடுப்பனவை சகல சுகாதாரத்துறை சார் தொழிலாளர்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை செவிமடுத்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, நிதி அமைச்சுடன் இது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அதில் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சுகாதார நிபுணர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாத்து அவர்களின் தொழில்சார் உரிமைகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும், சர்வதேச ரீதியாகவும் பாராட்டுகளைப் பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு பங்களிக்கும் சுகாதார நிபுணர்களுக்கு அனைத்து மரியாதைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - வீரகேசரி