அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தங்கள் அலுவலகங்களில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததை அடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றறிக்கையின்படி, அரச அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணி வரை பணப் பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், கடமை நேரத்தில் தங்களது அலுவலக அடையாள அட்டையை அணிவதும், சீருடை கொடுப்பனவு பெறும் அனைத்து அரச அலுவலர்களும் கடமை நேரத்தில் சீருடை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமையன்று அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் இருக்க வே்ண்டியது அவசியமானது என சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறைக்கும் அனுமதி வழங்கப்படாதிருப்பதைஎநிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு நிறுவனங்களின் விசாரணை கருமபீடங்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் கருமபீடங்கள், விண்ணப்பம் ஏற்கும் கருமபீடங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும். கடமை நேரத்தில் மற்ற தனிப்பட்ட வேலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
விசேட தேவையுடைய வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.