ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண்பது சாத்தியப்படாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில், ஆசிரியர்களுக்கு மாத்திரம் 30 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவ்வாறானால் மேலும் 40 பில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிரியர்களின் சம்பளமுரண்பாட்டுக்கு தற்போது உடனடியாக தீர்வு காண முடியாது. கட்டங்கட்டமாக இதற்கு தீர்வு காண்பது தொடர்பில் அடுத்த வருடம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கமானது அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச்
செலவு கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாவை வழங்குவதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கென மேலதிகமாக 30 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் கல்வியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில், எதிர்க் கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த கல்வியமைச்சர்:
அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பை வழங்குவதற்கு 30 பில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.
அத்துடன் இலவச பாடநூல் வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபா, பகல் உணவுக்காக 16 பில்லியன் ரூபா,
மாணவர்களுக்கு பாதணிகள் வழங்குவதற்காக 2.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.
இவற்றை எந்த வகையிலும் வழங்காமல் நிறுத்த முடியாது. கண்டிப்பாக மாணவர்களுக்கு இவற்றை வழங்கியே ஆக வேண்டும்.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அவர்களது தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக போராட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அவர்கள் இது விடயத்தில் தெளிவுடன் செயற்படுவார்களென நான் நினைக்கிறேன்.
அதற்கிணங்க இந்த வருடத்தில் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது. அடுத்த வருடம் முதல் நாம் கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம். ஆசிரியர்கள் நிலைமையை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம் - தினகரன்