அரசாங்கத்தின் மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிராக மேல் மாகாண வங்கி ஊழியர்களின் பொது மாநாடு இடம்பெறவுள்ளது.
டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி காலை 9.00 முதல் கொழும்பு விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அறிக்கை ஊடாக அறிவித்தல் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அரசாங்கம் முன்வைத்துள்ள பல மக்கள் விரோதத் திட்டங்களில், நாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் 20% பங்குகளை மூலோபாய முதலீடுகளுக்கானது என்று கூறி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவையின் முடிவின்படி, வங்கிகள் உட்பட பொது நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள அனைத்து வகையான கூட்டு ஒப்பந்தங்களையும் புதுப்பிக்கவோ அல்லது புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
■ அரச வங்கிகளின் விற்பனை
■ கூட்டு ஒப்பந்தங்களை தடை செய்தல்
■ நியாயமற்ற வரிவிதிப்பு
■ தொழிலாளர் சட்டத் தடைகள்
■ அடக்குமுறை கட்டளைச் சட்ட்ங்கள்
■ பணியாளரின் நிதிக் கொள்ளை
போன்ற அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் முதலாவது பொது மாநாடு 02 டிசம்பர் காலை 9 மணிக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் அங்கத்துவர்களின் பங்கேற்புடன், கொழும்பில் உள்ள விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.