மலையக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தகவல் வௌியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர்,
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மலையகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று எதிர்கட்சி உறுப்பினர்களே கூறியுள்ளார்கள்.
தோட்ட உட்கட்டைமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்க 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பெருந்தோட்ட மேம்பாட்டுக்காக 89 பிரதேச செயலகங்களுக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு மிக அவசியமான விடயங்களை மேற்கொள்வதற்காக அந்த நிதி பிரதேச செயலகங்கள் ஊடாக செலவிடப்படும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது. இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சரவை மூலம் குழுவொன்று நியமிக்கப்படும்.
அதன்படி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுத்தவரை, 14 பில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாக கிடைக்கின்றது. அதனுடன் 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அமைச்சின் ஊடாகக் கிடைக்கின்றது. மேலும், 10,000 வீட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம், 63 smart class room வேலைத் திட்டத்தையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.
இவை மாத்திரமன்றி மலையக மக்களின் 200 வருட நிறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் உள்ளது. அது தொடர்பாக தற்போது கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன் தேவையான ஆவணங்களைத் தயார்செய்தும் வருகின்றோம். இந்த அனைத்துப் பணிகளையும் எதிர்வரும் 2024 மே மாதத்திற்குள் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த விடயங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி மலையக மக்களுடைய வாழ்க்கையை மேம்பாடுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
தோட்ட மக்களின் சம்பள விடயத்தைப் பொறுத்தவரை, இதுவரை கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை என்று கூறிவந்த பலரும் இப்போது கூட்டு ஒப்பந்தம் தேவை என்று கூறுகின்றனர். எனவே தற்போது மக்களுக்கு இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தெரிய வந்துள்ளன. ஜனாதிபதி முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனியார் துறையினரும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
இந்த சம்பள உயர்வு தொடர்பில் அரசியல் ரீதியிலான தீர்மானமின்றி பொருளாதார ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது இந்நாட்டில் நிலவும் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டே முடிவு செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் சம்பளம் வழங்கப்படும் பொறிமுறை மாற்றப்பட வேண்டும். - என்றார்.