தொழில் தகைமையை பெற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்பை பெறலாம் - வட மாகாண ஆளுநர்
தொழில் தகைமையை பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பெற முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனை பொருளியல், ஆடை வடிவமைப்புக்கான கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
இந்த நாட்டிலே நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம்தான், பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொள்வது ஆகும்.
அண்மையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் பிரதம செயலாளரும் என்னிடம் கூறிய விடயம், வடக்கு மாகாணத்தில் 780 மாணவர்கள் பாடசாலையில் இருந்து தங்களுடைய கல்வியை இடைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதே.
அந்த அறிக்கையை மீளமைத்து என்னிடம் புதன்கிழமை 611 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர் எனவும் ஏனைய மாணவர்கள் பாடசாலைக்கு மீண்டும் சென்றிருக்கின்றனர் எனவும் கூறினார்கள்.
இதேபோன்று க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகியவற்றில் சித்தியடையாத மாணவர்கள், பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதவர்கள் என பலர் வருடாந்தம் வேலைவாய்ப்பற்ற இளைஞர் தொகைக்குள்ளே சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் தங்களுடைய பிள்ளைகள் பொறியியலாளராக அல்லது வைத்தியராக வரவேண்டும் என பெற்றோர் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு தவறு என்று கூறவில்லை. ஆனால், அதை எட்ட முடியாதவர்கள் அடுத்த கட்டமாக தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான தொழில் தகைமையை பெற்றுக்கொள்வதற்கான வழி வகைகளை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும்.
அதற்காகத்தான் அரசாங்கம் தற்போது பல்வேறு வகைகளில் தொழில்நுட்ப கல்விகளின் ஊடாக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக NVQ என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தொழில் தகைமை என்பதற்கும் கல்வித் தகைமை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
நாங்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொள்கின்ற பட்டங்கள் அனைத்தும் எங்களுக்கு தொழில் தகைமையை தருவதில்லை. அவற்றில் பெரும்பாலானவை கல்வித் தகைமையை மட்டும்தான் எங்களுக்கு தருகிறது. அந்தத் தகைமைகளோடு தொழில் தகைமையை தேடுவதென்பது முயல் கொம்பான ஒரு விடயம்.
எனவே, தொழில் தகைமையுடனான கல்வித் தகைமையை பெற்றுக்கொண்டு, தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல, தொழில் வழங்குநர்களாகவும் மாற வேண்டும். இன்று சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
மூலம் - வீரகேசரி