கல்வித்துறையின் முன்னேற்றம் மற்றும் உத்தேச திட்டங்கள் குறித்து விரைவில் வெளியிடுவோம் - கல்வி அமைச்சர்
கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள் தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கல்வித் துறை முன்னேற்றம் தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வித்துறையின் தரம் தொடர்பான சட்டமூலம் கல்வி அமைச்சின் மேற்பார்வையின் பின்னர் அது சட்டமூல தயாரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக நாம் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் சில சட்டங்களை நிறைவேற்றினோம்.
அந்த வகையில் சட்டமூலம் தயாரிப்பு அலுவலகத்திற்கு பாரிய செயற்பாடுகள் உள்ளன. சட்டமூலம் தயாரிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. எல்லா சட்டத்தரணிகளாலும் அதனை முன்னெடுக்க முடியாது. கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் இவ்வாறு சட்டமூலம் தயாரிப்பது தொடர்பில் கால தாமதங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளன.
அந்த வகையில் கல்வி அமைச்சும் நீதி அமைச்சும் அதில் பாரிய செயற்பாடுகளை மேற்கொண்டதால்தான் கடந்த காலங்களில் பல சட்டங்களை நாம் நிறைவேற்ற முடிந்தது.
அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வித்துறையின் இந்த ஆண்டின் முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டுக்கான உத்தேச செயற்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அமைச்சு ஆலாேசனைக்குழுவுக்கு வருமாறும் கேடடுக்கொள்கிறோம் என்றார்.
மூலம் - வீரகேசரி