நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா துறைக்கு வழங்க இணக்கம் - அமைச்சர் பந்துல
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா துறைக்காக வழங்குவதற்கு தாம் இணக்கம் தெரிவிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊக சந்திப்பில், இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியாவில் இருக்கின்ற தபால் நிலையம் எம்மால் பராமரிக்க முடியாத, நிறப்பூ்ச்சிகூட பூச முடியாத நிலையில் உள்ளது. தற்போது நீங்கள் பார்த்தால் தெரியும் நுவரெலியா தபால் அலுவலகத்தில் கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும் இடத்தில் வாளி வைக்கப்பட்டுள்ளது. செயலிழந்து இருக்கின்ற அந்த வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான யோசனை தாஜ் சமுத்திரா ஹோட்டலினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையினரின் மிகப் பிரசித்தமான இடம் நுவரெலியாவாகும். குறிப்பாக இந்திய சுற்றுலா பயணிகள் சீதா எலிய ஊடாக பயணிக்கின்றனர். எனவே அங்கு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே விடையத்துடன் தொடர்புடைய அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இதற்கு முழுமையாக விருப்பம் தெரிவிக்கின்றேன். தபால் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த இடத்தை ஹோட்டல் அமைப்பதற்காக வழங்க விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் என்ற அடிப்படையில் நான் முழுமையாக இணக்கம் தெரிவிக்கின்றேன். - என்றார்.