அரச மருத்துவ அதிகாரிகள் சுழற்சி முறையில் மாகாண ரீதியில் பணிப்புறக்கணிப்பு!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுழற்சி முறையில் மாகாண ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய (02) தினம் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச்செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
நாளைய (03) தினம் வடக்கு மாகாணத்திலும், எதிர்வரும் 06 ஆம் திகதி வடமேல் மாகாணத்திலும், 07 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
8ஆம் திகதி மத்திய மாகாணத்திலும், 9ஆம் திகதி தென் மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.
10 ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் உள்ள வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.