இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில்,
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் நாணயக்கொள்கைச் சபையினால் மேற்கொள்ளப்பட்;ட முதலாவது நாணயக்கொள்கை மீளாய்வு 2023 ஒத்தோபர் 04ஆம் நாளன்று நடைபெற்றது.
இம்மீளாய்வில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 10.00 சதவீதத்திற்கும் 11.00 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குச் சபை தீர்மானித்தது.
தாழ்ந்தளவிலான பணவீக்கம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை எதிர்பார்க்கப்படுகின்ற 5 சதவீத மட்டத்தில் உறுதிநிலைப்படுத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வளர்ச்சியினை அடைவதனை இயலுமைப்படுத்தும் நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியினால் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வெளியிடப்பட்ட பணிப்புரைகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான இடர்நேர்வு மிகையின் குறிப்பிடத்தக்க குறைவு என்பன உள்ளடங்கலாக முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணயக்கொள்கையின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலுடன் இணைந்து கொள்கை வட்டி வீதங்களின் இக்குறைப்பு எதிர்வருகின்ற காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினை துரிதப்படுத்துமென சபை எதிர்பார்க்கின்றது.
நாணய நிலைமைகளின் தொடர்ச்சியான தளர்த்தலின் நன்மைகளைத் தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களிற்கும் போதுமானளவிலும் விரைவாகவும் ஊடுகடத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சிக்கு ஆதரவளிக்குமாறு நிதியியல் துறை வலியுறுத்தப்படுகின்றது.