பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உச்ச நீதிமன்றத்தில் நேற்று (06) மனுத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் படி காணப்படும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\
இந்த சட்டமூலத்தினால் பயங்கரவாதம் என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை எனவும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் நபர்களை கூட கைது செய்யும் வகையிலான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சுதந்திரத்தை இழக்கும் வகையிலும், அதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் இந்த சட்டமூலம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறும், விசேட பெரும்பான்மை மூலமும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் சட்டமூலத்தை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
மேலும் குறித்த வரைவை நாடாளுமன்ற வாக்கெடுப்பிறகு உட்படுத்துமாறும் அது குறித்த விவாதத்தை நடத்துமாறும் உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.