தொழிலாளர் சட்டங்களை உருவாக்கல்: பொதுமக்கள் கருத்தறிய நியாயமான காலம் வழங்க வேண்டும் - அமெரிக்கா
பைடன் – ஹாரிஸ் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
தொழிலாளர் சட்டங்களை திருத்தியமைக்கும் செயல்முறை மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தரங்களுக்கு இணங்கிச் செயற்படுவதில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கை விளக்கமளித்தது.
தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தையும் பொது மக்கள் கருத்தறிவதற்கான நியாயமான காலப்பகுதியொன்றை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்கா வலியுறுத்தியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைப் பிரதிநிதிகள், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான (TIFA) 14 ஆவது கவுன்சில் கூட்டம் நேற்று (18) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்கவும் அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கவின் ஜ.நாவுக்கான பதில் உதவி வர்த்தகப் பிரதிநிதியான பிரெண்டன் லிஞ்ச் (Mr. Brendan Lynch, Acting Assistant United States Trade Representative for South and Central Asia) ஆகியோர் இந்த தொழில்நுட்ப மட்டக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.