தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான 16 நாள் நடைபயணம் இன்று நிறைவடைந்தது.
தலைமன்னாரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபயணம் ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவுபெற்றது.
பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
இதனை நினவுபடுத்தும் வகையில், மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நடைபயணயத்தில் 11 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மலையக வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல்.
ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.
தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக மலையக சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.
வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.
வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்காக, பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை.
பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இந்த நடைபயணத்தில் முன்வைக்கப்பட்டுளளன.
மாத்தளை பிரகடனம்
மலையகம் 200ஐ முன்னிட்டு கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த மலையக எழுச்சி நடைபவனி இன்று மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைந்ததோடு நிறைவுபெற்றது.
அதனை தொடர்ந்து, பயணத்தின் இலக்கு, மலையக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான நடைபவனி நிறைவு நிகழ்வு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும், மலையக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மாத்தளை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.