தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் வசதிகளை வழங்க முடியுமாயின், அதற்காக அடுத்த சில நாட்களில், நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இன்று (29) ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 3,568 நிலையங்களில் 472,553 மாணவர்கள் தோற்றுகின்றனர். அதற்காகப் சுமார் 40,000 அரச அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், இம்முறை பல பாடசாலைகளின் மாணவர்கள் தாம் கல்வி கற்கும் பாடசாலைக்குப் பதிலாக, வேறு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பெற்றோர்களும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்ததில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பரீட்சை நிலையங்களை மட்டுப்படுத்த கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மாணவர்களின் மன நிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் குறைந்தது ஒரு வருடமாவது உரிய பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவித்த பின்னரே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், மாணவர்களின் கல்விக்காக நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளையும் தாமதமின்றி நடாத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் அவசியமானது எனவும், அவை நடத்தப்படாமைக்கான காரணங்களை கூறிக்கொண்டிருப்பது பரீட்சை திணைக்களத்தின் பணியல்ல எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாணவர்கள் பழகிய சூழலில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பின்னணியை உருவாக்குவது கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய பொறுப்பு என்றும் தெரிவித்தார்.