உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல்செய்துள்ள 3000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, காமினி வலேபொட ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அதற்கு நியாயமான தீர்வொன்றை விரைவாக பெற்றுக்ெகாடுக்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதமூலம் கேட்டுக்ெகாண்டுள்ளனர்.
மேற்படி 3000 க்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல்செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கான சம்பளம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் பெரும் கஷ்டத்திற்குள் உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் அந்தக் கடிதமூலம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது உறுதியில்லை என்றால் மேற்படி அரசாங்க உத்தியோகத்தர்கள் பெற்றுவந்துள்ள சம்பளத்திலிருந்து நியாயமான ஒரு தொகையையாவது மார்ச் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, அவர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் கடன்களுக்கான அறவீடுகள் வட்டி உள்ளிட்டவைகளை தேர்தல் இடம்பெறும் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அக்கடிதமூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.