பல தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும் தபால் உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய (15) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், 20000 ரூபா வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சார கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்துள்ளன.

அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் இன்றைய தினம், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் இன்றைய தினம் பணி புறக்கணிப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

இதேவேளை, இன்று நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,  தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெறுகின்ற பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளித்து துறைமுகங்கள் மற்றும் நீர் வளங்கள் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

அதேநேரம் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கமும், இன்று சுகையீன விடுமுறை அறிக்கையிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றது.

இதேவேளை, தபால் சேவை ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால்  தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்

இதேவேளை, இன்றைய பணிபுறக்கணிப்பிற்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image