அடக்குமுறைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் - மக்கள் இயக்கத்தோடு இணைந்து போராடுவோம் - சுமந்திரன்

அடக்குமுறைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் - மக்கள் இயக்கத்தோடு இணைந்து போராடுவோம் - சுமந்திரன்

தொழிற்சங்கங்கள் மக்கள் இயக்கத்தோடு இணைந்து அரசியல் கட்சிகளாக நாங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவினால்  கொழும்பு - மருதானையில் நேற்று (01) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைக்கு மிகவும் மோசமான அடக்குமுறை ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி பதவியில் அமர்ந்த உடனேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அடக்குமுறையை மிகவும் மோசமான விதத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

மே 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் அதனை எதிர்த்து அறிக்கை விட்டிருந்தார். அவசரகால சட்டத்தை பிரயோகித்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்திற்கு நான் வழங்குகின்றஆலோசனைகள் அனைத்தையும் நான் நிறுத்தி விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது அதுதான் அவருடைய நிலைப்பாடாக இருந்தால், ஆட்சிக்கு வந்தவுடனேயே அது தலைகீழாக மாறி விடுவதை நாங்கள் காண்கின்றோம். ஆகவே மக்களை இவ்வாறு துன்புறுத்தி அடக்கு முறையினால் ஆட்சி நடத்த முடியும் என்று அவர் நினைப்பாராக இருந்தால் அது ஒருபோதும் சரிவராது. தொழிற்சங்கங்கள் மக்கள் இயக்கத்தோடு சேர்ந்து அரசியல் கட்சிகளாக நாங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image