பாடசாலை சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை - ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலை சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை - ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று ( 23) பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்களுக்கு தேவையான எரிபொருளை முறையாகவும் விரைவாகவும் வழங்குவது குறித்து இன்று விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, ​​மீன்பிடி, சுற்றுலா, உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளூடாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களிலும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரிசையில் இருந்து பெறப்படும் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி, பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறையை விரைவாக செயற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் கொள்வனவு நடவடிக்கைகள், அதற்கு தேவையான பணத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ,  நிதி அமைச்சு மற்றும் அரச வங்கி அதிகாரிகளுக்கு இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image