இளைஞர்களுக்காக முன்னிற்போம் - அடக்குமுறைக்குமுறையை எதிர்ப்போம் - தொழிற்சங்கங்கள்
அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் ஆணையற்ற மக்களினால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இதனுடாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்களின் பிரதிபலனை கொள்ளையடித்து ரணில் விக்ரமசிங்க இந்த பதவிக்கு வந்து இருக்கின்றார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை பாதுகாத்தல் போராட்டக்காரர்களுக்காக முன்னிற்றல், போராட்டக்காரர்களை பலப்படுத்துதல் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இன்று அடக்குமுறைே அவருடைய ஒரே செயல்பாடாக மாறி இருக்கின்றத.
மக்கள் ஆணையற்ற அனைத்து ஆட்சியாளர்களின் இறுதி நடவடிக்கையாக அடக்குமுறை அமைகின்றது. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை கைப்பற்றியவர்கள் தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) தெரிவித்திருந்தார். இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் கொழும்புக்கு திரண்டு வந்து முன்னெடுத்த நடவடிக்கை தான் அது. ஆட்சியில் இருந்தவர்களின் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக துன்பங்களை அனுபவித்த மக்கள் மக்கள் திரண்டு வந்து போராடினர். மக்கள்தான் இந்த நடவடிக்கையில் முன்னோக்கி வந்தனர். பாரிய அடக்குமுறைக்கு அவர் தற்போது தயாராக இருக்கின்றார். அவ்வாறான அடக்குமுறைக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும் தொழிற்சங்கத்தினர் என்ற அடிப்படையிலும் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் விசாரணைகளை மேற்கொண்டு கைவிரல் அடையாளங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் போராட்டத்தின் ஊடாக முன்னோக்கி வருபவர்களை இலக்குவைத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றைஇவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சார்பில் நாங்கள் முன்னிற்போம். இந்த அடக்குமுறைக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு என்ற அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும், இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளவேண்டிய உச்சபட்ச நடவடிக்கை எடுப்போம். - என்றார்.