ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட அறிவித்தல்

ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டதன் படி பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜூலை பத்தாம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்திருந்தார். பாடசாலை விடுமுறை தொடர்பாக மாற்றி மாற்றி அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன. இது 43 லட்சம் மாணவர்களின் கல்வியை வீணடிக்கும் செயற்பாடாகும். ஏனெனில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பாடசாலை மூடப்பட்டு பின்னர் கிராமப்புற பாடசாலைகளில் மாத்திரம் முன்னெடுக்குமாறும், நகர்ப்புற பாடசாலைகளை மூடுமாறும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கூறுவது யாதெனில், உங்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் நீங்கள் பாடசாலை விடுமுறையில் இருக்க வேண்டும். உங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்படும். அது கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் பிரச்சினையில்லை.

பாடசாலைக்கு செல்லக்கக்கூடிய ஆசிரியர்கள் மட்டுமே சமூகமளிக்க வேண்டும் என்று கல்வியமைச்சு கூறியிருக்கின்றது. எனவே அதனை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறின்றி மாகாண கல்விப் பணிப்பாளருக்கோ அல்லது வேறு எவருக்கோ பயந்து செயல்பட வேண்டாம் என ஆசிரியர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image