பாடத்திட்டங்களை முழுமைப்படுத்த காலமில்லை: மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு!

பாடத்திட்டங்களை முழுமைப்படுத்த காலமில்லை: மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு!

போக்குவரத்து பிரச்சினை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பாடத்திட்டத்தையும் முழுமைப்படுத்துவதிலும் தாக்கம் செலுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு மேற்கண்டவாறு தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை ஆரம்பிக்கும் போது நாங்கள் அவதானித்த விடயம் ஒன்று தான் சில வகுப்புகளை எடுத்துக்கொண்டால் மாணவர்களின் வருகை மிகவும் வீழ்ச்சியில் காணப்படுகின்றது. நாட்டின் போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை இதற்கு பிரதான காரணமாகும். அரசாங்கம் மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். இன்றும் டீசல் பெட்ரோல் வரிசைகள் இருக்கின்றதை அவதானிக்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் தனியார் வேன்களிலேயே பாடசாலைக்கு வருகின்றனர். இப்போது இந்த சாரதிகளும் டீசல் வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியானால் இந்த மாணவர்களின் கல்வியை வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற திட்டம் என்ன? இந்த விடயம் தொடர்பில் நாங்களும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக கூறினோம். 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்க இருக்கின்றது அதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாங்கள் கூறினோம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு இல்லை.

தற்போது பெற்றோர்களும் அதிபர்களும் ஆசிரியர்களும் தான் இந்த கல்வி கட்டமைப்பை முன்கொண்டு செல்கின்றனர். அரசாங்கத்தின் தலையீடு இல்லை. மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் போது இருக்கின்ற போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் உரிய வேலைத்திட்டம் அவசியமாகும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நபர்கள் ஏதாவது டீசல் மானியம் வழங்குமாறு கேட்கின்றனர். மாணவர்களுக்காக ஏதாவது இது தொடர்பில் திட்டம் இருக்க வேண்டும். எந்த ஒரு வேளை திட்டமும் இல்லை. எப்படியாவது பாடசாலைக்கு செல்லுங்கள் என்று தான் இவர்கள் கூறுகின்றனர். வெறுமனே பாடசாலைக்கு வாருங்கள் என்று சொன்னால் வர முடியாது. இது தொடர்ச்சியாக நீடித்தால் மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது.

தற்போது பாடத்திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கான நாட்கள் போதுமானதாக இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி அடையும்போது இந்த நாட்கள் தொடர்ந்து குறைவடையும். அப்போது மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கும். எனவே நாங்கள் தெளிவாக கூறுகின்றோம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு உறுதியான ஒரு பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கு பதில் வழங்க முடியாது என்றால் அது வீட்டுக்கு செல்ல வேண்டும். மாணவர்களின் கல்வி வீழ்ச்சி அடைந்தால் அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே இது தொடர்பில் தலையீடு செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலை பயணசேவை வேன்களில் பயணிக்க முடியாத சந்தர்ப்பங்களில் அவர்கள் பஸ்களிலும் ரயில்களிலும் பயணிக்கின்றனர். இதன்போது அவர்கள் மிகவும் நெரிசலான நிலைக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. எனவே இது போன்ற நிலையை மாணவருக்கு வழங்க வேண்டாம் என நாங்கள் கூறுகின்றோம். மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் ஒரு தெளிவான போக்குவரத்து திட்டத்தை முன்வைத்தது, அது தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிவித்தலை வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image