ஒருவேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வர்த்தக வலய ஊழியர்கள்
மூன்று வேளை உணவு சாப்பிட்ட நாங்கள், இப்போது இரண்டு வேளை, ஒருவேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக வலய தொழிலாளர்களிக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் பிரதிநிதி தம்மிகா சோமரத்ன கருத்து தெரிவிக்கையில்,
மூன்று வேளை உணவு சாப்பிட்ட நாங்கள், இப்போது இரண்டு வேளை, ஒரு வேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாடு தற்போது மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பமாகும். உண்மையிலேயே எமது ஆட்சியாளர்கள் 74 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக முன் கொண்டு வந்த இந்த ஆட்சி முறைமையில் காணப்படும் தவறு காரணமாகவே நாங்கள் எதிர்நோக்குகின்றோம், உங்களுக்கு தெரியும் கடந்தகாலங்களில் உயிராபத்துக்கு மத்தியில் கொரோனா பரவலை நாங்கள் எதிர்கொண்டு இருந்தோம். ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு டொலரைக் கொண்டு வருவதற்காக நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்த தொழிலாளர்களாவோம்.
அந்த சந்தர்ப்பத்தில் எவரும் நிறுவனங்களுக்கு செல்லவில்லை. நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் அத்தியாவசியசேவை எனக் கருதி அரச மற்றும் தனியார் துறைகளில் நாங்கள் தொழிலுக்கு சென்றோம். நாங்கள் வேலைக்கு சென்று இலங்கைக்கு டொலர் கொண்டு வந்தோம். ஆனால் கொண்டுவந்த டொலர்களின் மூலம் எங்களுக்கு இன்று வாழக்கூடிய நிலைமை உள்ளதா? எங்களுக்கு தற்போது அதற்கு சமாந்தரமான சம்பளம் கிடைக்கிறதா? எங்களது பிள்ளைகளுக்கு போசாக்குள்ள உணவு வேலை ஒன்றை கொடுக்க முடிகின்றதா? அதிகாலையிலேயே வேலைக்கு வரும் பெண்ணுக்கு ஒரு வேளை சாப்பாட்டை சமைத்து வைத்து செல்லக்கூடிய நிலைமை இருக்கின்றதா?
சமையல் எரிவாயு இல்லை. அதே போன்று மின்சாரம் ஒரு சந்தர்ப்பத்தில் இல்லாமல் போகின்றது அதேபோன்று நாங்கள் மிகவும் கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருக்கின்றோம். விறகு இல்லை, சமையல் எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, பொருளாதாரப் பிரச்சினை இருக்கின்ற நிலையில் நாங்கள் எவ்வாறு எங்களது வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியும்?
உங்களுக்கு தெரியும் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கின்ற ஊழியர்களாக இந்த வர்த்தக வலயங்களில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு மிகவும் சொற்பமான சம்பளமே கிடைக்கின்றது. அந்த சம்பளத்தில் வாழக்கூடிய நிலைமை இல்லை.
எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. அதே போன்று இன்று வாங்குகின்ற பொருட்களின் விலை நாளை இல்லை. இன்று வாங்குகின்ற மரக்கறிகளின் விலை நாளை இல்லை. முதலில் கீரி சம்பா ஒரு கிலோ வாங்கிய விலைக்கு இப்போது நாட்டரிசி வாங்குகின்றோம்.
வர்த்தக வலயத்தில் வாழ்கின்ற நாங்கள் மிகவும் துன்பத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். எனவே பொருத்தமான ஆட்சியாளரை தேர்வு செய்வதற்காக எங்களுக்கு வழி ஏற்படுத்தி பதவி விலகுமாறு நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொள்கின்றோம், - என்றார்.