பொதுச் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அத்தியாவசியமான குறைந்தபட்ச உத்தியோகத்தர்களை மாத்திரம் இன்று (26) முதல் பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்குப் பொறுப்பான செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னேவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த சுற்றறிக்கை தடையாக இருக்கக்கூடாதென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படாமை காரணமாக அரச ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்யும்பொருட்டு மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் முன்னர் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு தற்போது வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.