வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட தகவல்

வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கமுடியும்.

இருப்பினும் பணவீக்கமானது 30 - 40 சதவீதமாகவே  தொடர்ந்து காணப்படும்.  அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது.  எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியானது

நாட்டின் பொருளாதார நிலையும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளும்' என்ற தலைப்பில் இலங்கை ப்ரஸ் கிளப்பினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது

நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாமல் மிகமோசமாக முறிவடைவதைத் தடுப்பதற்காக கடன்மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளியிட்டது.

அதன்படி கடன்வழங்குனர்களுக்குரிய கடன் மீள்செலுத்துகைகளை உரியவாறு மேற்கொள்ள முடியாத நிலையிலிருப்பதாகவும், அதற்கு மேலும் காலஅவகாசத்தையும் கடன்நிவாரணங்களையும் வழங்குமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை இறக்குமதிகள் மூலமான செலவினங்கள் ஏற்றுமதிகள் மூலமான வருமானத்தை விடவும் உயர்வாகக் காணப்படுகின்றது.

அடுத்ததாக எரிபொருள், எரிவாயு உள்ளடங்கலாக நாளாந்தம் தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவிடமிருந்து கடனுதவி அடிப்படையில் ஒரு மில்லியன் டொலர், 500 மில்லியன் டொலர் மற்றும் 500 மில்லியன் டொலர் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நிதியுதவிகள் மூலம் இறக்குமதிகளுக்கு அவசியமான நிவாரணங்களை மத்திய வங்கியினால் ஓரளவிற்கு வழங்கமுடியும்.

அதுமாத்திரமன்றி அவசர நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் விநியோக நடவடிக்கைகளில் காணப்படும் சிக்கல்களைக் குறைப்பதன்மூலம் அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சுமையை ஓரளவிற்குக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறை நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>

<p>வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் உறுப்புநாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதைப் பொறுத்தமட்டின் உரியவாறான செயன்முறையைப் பின்பற்றவேண்டிய ஆணையை சர்வதேச நாணய நிதியம் கொண்டிருக்கின்றது.

இப்போது அச்செயன்முறையை இலங்கை பின்பற்றுவதுடன், குறித்தவொரு செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே அதன் முதற்கட்டமாகும்.

எனினும் கடந்த சில தினங்களான நிலவிய குழப்பங்கள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலைவரம் என்பன இந்தச் செயன்முறையைக்கு இடையூறாக அமைந்தன.

எனவே குறித்தவொரு செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதும் நிதிக்கொள்கை ஒன்றுக்கான அனுமதியைப் பெறுவதும், அதன் பின்னர் நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதுமே இலங்கை அடையவேண்டிய மைல்கல்லாக உள்ளது.

கடன் மறுசீரமைப்பு என்பது மற்றுமொரு கடினமான செயன்முறை என்றபோதிலும், கடன்வழங்குனர்களை அதற்கு இணங்கச்செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய வங்கி முன்னெடுத்தது.

பொதுவாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் 3 - 4 மாதகாலப்பகுதியில் நிறைவடையக்கூடியவை என்ற போதிலும், இப்போது நாட்டின் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையானது நிலைபேறானதன்மை அற்றதாகக் காணப்படுவதால் இது பலமடங்கு சிக்கலானதாக உள்ளது. கடன் பொறுப்புக்கள் நிலைபேறான மட்டத்திற்குக் கொண்டுவரப்படும்வரை சர்வதேச நாணய நிதியத்தினால் எந்தவொரு நிதியுதவியையும் வழங்கமுடியாது.

இலங்கை இதற்கு முன்னர் ஒருபோதும் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டதில்லை என்பதால், இச்செயன்முறையில் இலங்கைக்கு அனுபவமில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் உறுதியாகும் வரை இலங்கை எவ்வாறு இயங்கப்போகின்றது? என்பதே தற்போது இருக்கின்ற கேள்வியாகும்.

அதுவரையில் இலங்கைக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு உதவியும் போதுமானதாக இருக்காது. எனவே 3 - 6 மாதகாலத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் ஓரளவிற்கு மீட்சியடையும். இருப்பினும் இவ்வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையவேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றதாகும்.

எனவே பத்திரிகைக்கான காகித மூலப்பொருள் இறக்குமதி உள்ளடங்கலாக வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் எந்தவொரு துறைக்கும் மத்திய வங்கியினால் உதவியளிக்க முடியாது.

இப்போது அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கே நாம் முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கமுடியும்.

அடுத்த 6 - 7 மாதங்களுக்குள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தமுடியும். இருப்பினும் பணவீக்கமானது 30 - 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது.

எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர். அதனை முன்னிறுத்தி மத்திய வங்கி பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்போது அரசாங்கம் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கமுடியும்.

குறைந்தளவு வருமானம் பெறுவோருக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கு உலகவங்கி முன்வந்திருக்கின்றது. எதுஎவ்வாறெனினும் வறுமைநிலை கூடும் என்பதுடன், வேலைவாய்ப்பையின்மையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image