கொழும்பில் அணிதிரண்ட மின்சார சபை தொழிற்சங்கத்தினர் வழங்கிய செய்தி
கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்து இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினர் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், தேசிய சேவையாளர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், ஐக்கிய சேவை சங்கம், இலங்கை மின்சார அதிகாரசபை ஊழியர் சங்கம், அகில இலங்கை நுகர்வோர் இணைப்பு சங்கம் என்பன உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மின்சார சபை ஊழியர்கள், மின்சார சபை தலைமை காரியாலயத்தில் முன்பாக அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
"கெரலப்பிட்டி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள், இறக்குமதி மற்றும் விநியோகம் மீதான ஏகபோகம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை!"
"இலங்கை மின்சார சபையை பங்குகளாக பிரிக்கும் ஆபத்து!" இதையெல்லாம் முறியடிக்க ஒன்றிணைந்து நிற்போம்!
"இலங்கை மின்சார சபை மீண்டும் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை உடன் நிறுத்து" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் கருத்து தெரிவிக்கையில்,
இந்த உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றே நாம் அழுத்தம் கொடுக்கின்றோம். இந்தப் போராட்டத்தை வேலை நிறுத்தமாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது. மின்சார, துறைமுக மற்றும் கனியவள தொழிற்சங்கங்களின் இந்தப் போராட்டத்தை நிறுத்தக்கோரி மின்சார சபை அதிகாரிகளும் அரசாங்கத்தினரும் நேற்று நீதிமன்றத்தை நாடினர்.
இந்த போராட்டத்தை தங்களுக்கு நிறுத்த முடியாது என்றும் அது ஜனநாயக உரிமை என்றும் நீதிமன்றம் கூறியது. நாங்கள் நீதிமன்றத்திற்கு எங்களது கௌரவத்தை தெரிவிக்கின்றோம்.
எவ்வாறு இருப்பினும் முன்னதாக அரசாங்கம் இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு விடுமுறையை ரத்து செய்வதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் சுகயீன விடுமுறை அறிக்கையிட்டு மின்சாரத்துறை ஊழியர்கள் இன்று கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தை நாங்கள் வெற்றியை நோக்கி கொண்டு செல்வோம். பாரிய மக்கள் அலையை நாம் நாளைய தினத்தின் பின்னர் வீதிக்கு கொண்டு வருவோம். அமைச்சரவை அமைச்சர்கள் அமைச்சுப் பதவியை துறந்து வெளியேறுமாறு நாங்கள் கூறுகின்றோம்.
இன்றைய தினத்திற்குள் நாட்டில் எங்காவது ஒரு பிரதேசத்தில் மின்சாரத்தடை ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். நாட்டில் மின்சாரத்தை துண்டித்து மக்களை திசைத்திருப்புவதற்கான சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. அதன் பொறுப்பை எங்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், நாளைய தினத்திற்குள் பணிநிறுத்தப் போராட்டம் தொடர்பில் தீர்மானித்து தாங்கள் அறிவிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களே வீதிக்கு இறங்குவோம். நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவோம். - என்றார்.
இதேநேரம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மின்சார விநியோக தடை ஏற்படும் என சிந்திப்பது கடினமாகும். 12 ஆண்டுகளின் பின்னரே மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று வீதிக்கு இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் முக்கியமானதாகும். மிகவும் சிறு சிறு விடயங்களுக்கு நாங்கள் வீதிக்கு இறங்குவதில்லை. ஆனால் இன்றைய தினம் மிக அதிகளவான பொறியியலாளர்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர்.
1996 ஆம் ஆண்டுதான் நாங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு சென்றிருந்தோம். வீதிக்கு இறங்கி போராட்டம் செய்வதைப்போல பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மாட்டோம். ஆனால் இந்த உடன்படிக்கை மிகவும் மோசமானதாகும். அதனால்தான் எமது ஏனைய தொழிற்சங்கத்தினரையும் இணைத்துக் கொண்டு அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு இன்று பொறியியலாளர்கள் இங்கு வந்திருக்கின்றனர். அதனால் மின்சார விநியோகத்தடை ஏற்பட ஏற்படாது. இது ஆரம்பம் மட்டுமே. இதனூடாக நாங்கள் ஒரு முன்னெச்சரிக்கை விடுக்கின்றோம். இந்த மோசமான கொடுக்கல் வாங்கலை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் விநியோகத்தடை ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய பணிப்புறக்கணிப்பு போன்று செல்வதற்கும் இடமுள்ளது - என்றார்.