அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளதாக
கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் 125 ரூபாவை விடவும் குறைந்த விலையாக அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 3 களஞ்சியங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட சீனி, அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதை அடுத்து, சதொச ஊடாக அதனை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறப்பு அங்காடிகளுக்கும், சாதாரண வர்த்தக நிலையங்களுக்கும் குறித்த சீனியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை காரணமாக, ஒரு கிலோகிராம் சீனியின் விலை 220 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், சீனியை இறக்குமதி செய்யும் சில நபர்களும், நிறுவனங்களும், அதனை நுகர்வோர் சேவை அதிகார சபையில் பதிவுசெய்யாமல், வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளன.
இதற்கமைய, சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இடங்கள், நுகர்வோர் சேவை அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டு, 12 ஆயிரத்து 255 மெற்றிக் டன் சீனி மீட்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நுகர்வோர் எதிர்நோக்கும் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு, சதொச ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.