கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான, உயர்நீதிமன்றின் தீர்ப்பு நேற்று முன்தினம் தமக்கு கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் நேற்று முன்மதினம் (05) நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட இருந்தது.
எனினும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், சட்டமூலம் மீதான விவாதத்தை, அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் நடத்த நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும், அதுகுறித்து அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 19 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.