பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் கோபா குழுவில் வெளியான தகவல்

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் கோபா குழுவில் வெளியான தகவல்

கலைப்பிரிவு பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 50 வீதமாக அதிகரித்திருப்பது பிரச்சினைக்குரியது என்றும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவின் கீழ் கல்வி பயிலும் எண்ணிக்கை மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலையின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கடந்த 23ஆம் திகதி ஆராயப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டன.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடிய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, தயாசிறி ஜயசேகர, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பிரசன்ன ரணவீர ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக, அஷோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், நிரோஷன் பெரேரா, வைத்தியலாநிதி உபுல் கலப்பதி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய, சிவஞானம் சிறிதரன், பீ.வை.ஜீ.ரத்னசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளை வடிவமைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு சுட்டிக்காட்டியது.

அரச நிறுவனங்கள், பகுதியளவு அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் மனிதவளத் தேவை தொடர்பில் முழுமையாக அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அநுராத விஜயகோன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image