உழைக்கும்போது செலுத்தும் வரியில் திருத்தம்: தொழிற்சங்கங்களுக்கு 2 வார கால அவகாசம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் (PAYE tax) திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக 'பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு' தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழு தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்துள்ளது.
உழைக்கும் போது செலுத்தும் வரி தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு தலையீடு செய்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
வரித்திருத்த நடவடிக்கையின் போது பாதிக்கப்படும் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடுவதற்காக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியிருந்தது.
வரித் திருத்தங்களினால் எதிர்பார்ப்புக்கள் மற்றும் நோக்கங்கள் நிறைவேறி உள்ளனவா, இவற்றின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட வருமானம் அடையப்பட்டுள்ளதா போன்ற விடயங்கள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. வரித் திருத்தத்தின் போது உழைக்கும் போது செலுத்தும் வரியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இதுவரை வரிச் செயற்பாடுகளுடன் தொடர்புபடாத நபர்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய புதிய வரி செலுத்துவோரைக் குழுவாகப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
வரிப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமையையும் குழு ஏற்றுக் கொண்டது. இதற்கு அமைய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் வலியுறுத்துவதாகவும் குழு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தது.
ஒவ்வொரு தொழிலுக்கும் எவ்வாறு வரி விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த கொள்கையை தயாரித்து எதிர்காலத்தில் அல்லது வரி திருத்தங்கள் இடம்பெறும் போது அதனை பாராளுமன்றம் ஊடாக சட்ட ஆவணமாக மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, உழைக்கும் போது செலுத்தும் வரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிக்கையை சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் இரண்டு வாரங்களுக்குள் தயாரித்து வழங்குமாறும் துறைசார் மேற்பார்வைக் குழு தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, கயாஷான் நவனந்த, (சட்டத்தரணி) வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், சுமார் 25 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.