இந்திய பயிற்சி ஆசிரியர்களின் 10 வாரகால பயிற்சிகள் ஆரம்பம்

இந்திய பயிற்சி ஆசிரியர்களின் 10 வாரகால பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை வந்துள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த மையங்களில் மெய்நிகர் ஊடாகவும் பத்து வார கால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பயிற்சி ஆசிரியர்களின் பயிற்சித்திட்டம் தொடர்பில், கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினது இலங்கை வருகையின் 200 ஆண்டுகளை பிரதானமாகக் கொண்டு, 750 மில்லியன் ரூபா பல்துறை இந்திய நன்கொடை உதவியின் கீழ், பெருந்தோட்ட பிராந்தியங்களிலுள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதன்படி இயற்பியல், வேதியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் உயிரியல் ஆகிய பாடத்துறை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 05ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, கல்வி அமைச்சு, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், இந்தியாவின் ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இலங்கையின் பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image