1,700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணக்கம் - ஜனாதிபதி

1,700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணக்கம் - ஜனாதிபதி

தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணயச் சபையை அழைத்துச் பேசி அந்த தீர்மானத்தை செயற்படுத்தத் தேவையான சட்டங்களை கொண்டுவர தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருக்கும் சேமலாப நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை அடுத்த வருடத்திலிருந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் நேற்று (10) கண்டி கரலிய மண்டபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

தோட்ட தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கும் பணிகள் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் அதனை வழங்கும் இயலுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும். 

மேலும், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தோட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. மேலும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் அந்த நிவாரணத்தை தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்குப் பின்னர் அந்த அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் நிர்ணயச் சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவும் அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை சட்டமாக்கவும் முயற்சிகளை முன்னெடுப்போம்.

அந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பழனி திகாம்பரன் எம்.பி ஆகிய இருவரும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image