அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டையும், மேலோட்டமாக பார்க்கும்போது, ஒரே மாதிரியானதாக இருந்தாலும், அது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட இரு கருத்தியலைக் கொண்டது எனலாம்.
அடிப்படை உரிமைகள் ஒரு நாட்டிற்கு விசேடமானதாகும். அது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்துடன் வடிவமைக்கப்படுகின்றது, அதேநேரம் மனித உரிமைகளானது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய உரிமைகளின் தொகுப்பாகும்.
தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தங்கள் உறுப்பினர்களை தௌிவுபடுத்தும்போது, அடிப்படை உரிமைகள் பற்றிய புரிதல் மிகவும் முக்கியமானது.
அதாவது, தொழிற்சங்க உறுப்பினர்கள் உரிமைகளுக்காக செயலாற்றும்போதும், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், அவை அடிப்படை உரிமைகளின் கீழ் வருமா அல்லது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது அவர்களுக்கு மேலும் முக்கியமானது.
ஏதேனும் மனித உரிமை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படும் போது அது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது. இலங்கையின் அடிப்படை உரிமைகள் பற்றிய தனியான அத்தியாயம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய நிலைமையாகும்.
அடிப்படை உரிமையானது, உயர்நீதிமன்றத்தின் முன் சட்டமாக அங்கீகாரம்பெறும்போது, மனித உரிமையானது அவ்வாறாக அங்கீகாரம் பெறுவதற்கான சாத்தியங்களும் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.
ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு அரசாங்கம் உத்தரவாதம் செய்து பாதுகாக்க வேண்டும்.
இந்த அடிப்படை உரிமைகள் அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாக செயற்படுவதுடன், அது அரசாங்கத்தின் தன்னிச்சையான அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
இதுதொடர்பில், இந்திய உச்சநீதிமன்றத்தால், அடிப்படை உரிமைகள் தொடர்பாக ஓர் அரசின் பெரும் பொறுப்பை வலியுறுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்கு தனி இடம் வழங்குவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சியாகவும், அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அரசியலமைப்பில், அடிப்படை உரிமைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதுடன், பல வழிமுறைமைகளில் அது நடைமுறையாகின்றது.
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய, நாட்டின் குடிமக்களின் கண்ணியம் மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக, சுதந்திரம், சமத்துவமான அடிப்படை உரிமைகள் மற்றும் நீதித்துறை சுயாதீனம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக 1972 ஜனநாயக அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் என்ற சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.