ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பு ரீதியான அடுத்த நடைமுறைகள் என்ன என்பது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதுகுறித்து விளக்கமளிக்கையில்,
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி ஒருவர் பதவி விலகுவதானால், ஜனாதிபதி தமது கையொப்பத்துடன் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு கையளிக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில்தான் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
பிரதமரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு மாத காலத்திற்குள் தகைமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் நடத்தப்படுகின்ற இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவை.
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்களானால் 113 வாக்குகள் பெறவேண்டும். இந்த நடைமுறைக்காக பாராளுமன்றத்திற்கு ஒரு மாத கால அவகாசம் இருக்கின்றது.
நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதி பதவி ஒருமுறை வெற்றிடமானது. 1993 மே முதலாம் திகதி ஜனாதிபதி பிரேமதாஸவின் படுகொலையுடன், அந்த நிலைமை ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் டி.பி.விஜேதுங்க சில மணித்தியாலங்களுக்குள் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அவ்வாறு நடந்த பின்னர் ஒரு வார காலத்திற்குள் 1993 மே 07ஆம் திகதி பாராளுமன்றம் அந்த வெற்றிடத்தை நிரப்பியது. புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்தது.
தற்போதைய ஜனாதிபதி எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக சபாநாயகர் ஊடகங்கள் வாயிலாக நேற்று தெரிவித்திருந்தார். அவ்வாறு பதவி விலகவேண்டுமாயின், ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு கையளிக்க வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி, தற்போதைய பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் தாமதப்படுத்தாமல் ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
கேள்வி – பாராளுமன்றத்தில் சபாநாயகரிடமிருந்து பதில் ஜனாதிபதி பதவியை நீக்கி மற்றும் ஒருவரை நியமிக்கும்போது, ஒரு நபருக்கு அப்பால் 3,4 பேர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகும்போது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா?
பதில் – பாராளுமன்றத்தின் அதியுச்ச நம்பிக்கை இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார். நம்பிக்கை இல்லாவிட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை காட்ட முடியும்.
அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது ஜனாதிபதி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ்தான் அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் வாக்காளர்களாக இருப்பர்.
ஒரு உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்தால் அந்த உறுப்பினர் போட்டியின்றித் தெரிவானார்.
1993 ஆம் ஆண்டில், பதில் ஜனாதிபதியாக இருந்த டி பி விஜேதுங்க மட்டுமே பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வேட்பு மனுவை கையளித்தார். எனவே அவர் போட்டியின்றி அடுத்த ஜனாதிபதியாக தெரிவானார். அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு அவர் தான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிகமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
அப்போது பாராளுமன்றத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலைப் போன்று அந்த வாக்கெடுப்பில் 1, 2, 3, 4 என விருப்பு வாக்குகளை குறிப்பிட முடியும். நான்கு விருப்பு வாக்கு வரையில் குறிப்பிடமுடியும்.
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடப்பது போல முதலில் எந்த வேட்பாளருக்கு 50 வீத்துக்கும் அதிகமான வாக்குகள் இருக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்.
50 இற்கும் அதிக ஆதரவு இருந்தால் அந்த வேட்பாளர் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
எவரும் 50 வீத வாக்குகளைப் பெறாதபட்சத்தில், ஜனாதிபதி தேர்தலைபோன்றே, பட்டியலில் இறுதியாக உள்ளவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் உள்ள 2 ஆம் விருப்பு வாக்கு கருத்தில் கொள்ளப்படும். 50 இற்கும் அதிக ஆதரவு உள்ளவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தான் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.