மனித உரிமைகளுக்கு மத்தியில் பொலிஸாரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சட்டக் கட்டமைப்பு!
பொலிஸாரின் சேவை தொடர்பான கடமைகள் மற்றும் உரிமைகள் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் 1866 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கபொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைமுறையில் உள்ளபொலிஸ் கட்டளைச் சட்டம் 1866ஆம் ஆண்டு பழமையானது என்பதை இங்கு காணலாம். இது தொடர்ந்து திருத்தப்பட்டாலும், அதன் பாரம்பரிய மற்றும் பழமையான சில அடிப்படைச் சட்டங்களின் படியே செயற்படுவதாகத் தெரிகிறது. இந்த இரு முக்கியச் சட்டங்களுக்கு மேலாக குற்றவியல் நடைமுறைச் சட்டம், மோட்டார் போக்குவரத்து சட்டம் என்பன மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு பரந்த அளவிலான பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஒப்படைக்கப்படுகின்றன.
இலங்கைபொலிஸின் வரலாற்றைப் பார்க்கும் போது நகரங்களில் பாதுகாப்பை வழங்குவதும், அமைதியைப் பேணுவதும்பொலிஸாரின் முதன்மையான மற்றும் மிக முக்கியமான பணியாகத் தெரிகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புக்கான காவல்துறையின் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் பொலிஸ் திணைக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதாவது, முதன்முறையாக மகளிர் காவல் பணி, காவல்துறையினருக்கு ஓய்வூதியம் வழங்குதல், இலவச கடவுச்சீட்டு வழங்குதல் போன்றவை அதில் உள்ளடங்கும்.
1983ஆம் ஆண்டபொலிஸ் விசேட அதிரடிப்படை ஸ்தாபிக்கப்பட்டது, 1948ஆம் ஆண்டுபொலிஸ் கடல்சார் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் 2002ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்திற்கு இணங்க காவல்துறை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை இலங்கை காவல்துறைக்கு முக்கியமான அறிமுகமாகும்.
அது வெறுமனே ஒரு சுயாதீனமான காவல்துறை ஆணைக்குழு என கூறப்பட்ட போதிலும், பின்னர் அது தனது அடையாளத்தை மாற்றுவதில் பக்கச்சார்பானதாகத் தோன்றியதுடன் அரசியல்மயமானதாகவும் காணப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் அதிகாரிகளும் பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதிகாரிகளின் பொறுப்பில் அங்கம் வகிக்க வேண்டும் என்றாலும், அவர்களின் நடத்தை சிதைந்து மனித உரிமைகள் மீறப்படுவதைக் காண்பது இப்போது மிகவும் அருவெருப்பான ஒரு செயலாக மாறியுள்ளது. பொதுவாக காவல்துறை அதிகாரியாக இருக்கும் நபர், தனது சீருடையை அணிந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குபவராக இருக்க வேண்டும்.
காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 56ஆவது பிரிவின்படி, ஒரு காவல்துறை அதிகாரியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நாம் அனைவரும் கவனிப்பது முக்கியமானதாகும்,
1. அனைத்து குற்றங்களையும், பொது துன்புறுத்தல்களையும் தடுக்க தேவையான மற்றும் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளல்
2. அமைதி காத்தல்
3. வன்முறை மற்றும் சந்தேகத்துக்கிடமான நபர்களை கைது செய்தல்
4. குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துதல்
5. பொது ஒழுங்கை பாதிக்கும் தகவல்களை சேகரித்தல் மற்றும் வெளியிடுதல்.
6. உயர் அதிகாரிகளின் சட்ட ஆணைகள் மற்றும் பிடிணைகளை நிறைவேற்றுதல்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புக்களை பார்க்கும்போது, இவை முறையாகச் செயற்படுத்தப்படுகிறதா என்பது நமக்குள் எழும் தீவிரமான கேள்வியாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்து குற்றங்கள், தவறான நடத்தைகள் மற்றும் பொது துன்புறுத்தல்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்களா?
அல்லது குற்றவாளிகள் வெளியில் இருக்கும் போது நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்களா?
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை மீறிச் செல்வதைக் காண்கிறோம்.
ஒரு குற்றம் நடந்ததாகத் தெரிந்தால், அதை எந்தவித பாரபட்சமும் இன்றி தடுக்க காவல்துறையினர் முற்பட வேண்டும். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
உயரதிகாரி ஒருவர் பொதுமக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டாலும், அது மனித உரிமை மீறலாகும், அது சட்ட ஒழுங்கு அல்ல என தெரியாமல் சிலர் செயற்படுவதனை காண்கின்றோம்.
மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரியாமல் செயற்படுகிறார்களா அல்லது குற்றங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக குற்றத்தை ஊக்குவிக்கும் விருப்பத்தினாலா காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற விடயங்களில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்ற சந்தேகம் பொதுவாக எழுகிறது.
காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி துப்பாக்கி, வாள், தடி ஆகியவற்றை எடுத்துச் செல்வது குற்றமாகும்.சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் மறைமுகமாகச் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம். ஆனால் திருடனின் தாயிடம் நியாயம் கேட்பதில் அர்த்தமில்லை.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 14ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அடிப்படை உரிமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
14 (1) ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது.
வன்முறையின்றி பொதுநலமாக இத்தகைய உரிமைகள் பயன்படுத்தப்படும்போது, காவல்துறையினரின் அடாவடியான நடவடிக்கையை எதிர்த்து, அந்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக மனு தாக்கல் செய்து, உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்குப் பதிவு செய்யலாம்.
இறுதியாக, காவல்துறை அதிகாரி ஒரு பொது ஊழியராகவும், குற்றத் தடுப்பு மற்றும் அமைதி காக்கும் அதிகாரியாகவும், பாரபட்சமின்றி அவரது தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும். அதாவது, ஒரு அரச ஊழியர் எப்போதும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமே தவிர சட்ட விரோதமாக செயல்படக்கூடாது.