இன்னும் ஏன் தாமதம்? ஒன்றிணைவோம் இலங்கையில் C190 ஐ அங்கீகரிக்க!

இன்னும் ஏன் தாமதம்? ஒன்றிணைவோம் இலங்கையில் C190 ஐ அங்கீகரிக்க!

வேலை உலகில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலாருமே வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். எனினும், பணியிட அதிகார அமைப்புகளும், சமூகத்தில் நிலவும் பால்நிலை சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும் பெண்கள் மீதே இவ்விடயத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்ககளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான விவாதத்தில் C190 சமவாயம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

வேலை உலகில் (world of work) இடம்பெறும் வன்முறைகளையும், துன்புறத்தல்களையும் இல்லாதொழித்து அனைவருக்கும் பாதுகாப்பான வேலைத்தளங்களை உருவாக்கும் நோக்கில் உலக தொழிலாளர் தாபனத்தினால் C190 சமவாயம் பரிந்துரைக்கப்பட்டு இன்றுடன் (25) இரு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பெண் தொழிற்சங்கத் தலைவர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் சுமார் ஒரு தசாப்தகாலமாக மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் பெறுபேறாக வேலையுலகில் இடம்பெறும் பால்நிலைசார் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்கவும் வெளிக்கொண்டு வருவதற்குமாக சர்வதேச தொழிலாளர் தாபனம் C190 சமவாயத்தை பரிந்துரைத்தது.

சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, ஜெனிவாவில் நடைபெற்ற தொழிலாளர் சம்மேளனத்தின் 108 ஆவது மாநாட்டின்போது பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் C190 சமவாயம் முன்வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி முன்வைக்கப்பட்டாலும் ஜூன் மாதம் 25ம் திகதியே முழு வீச்சுடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

C190 ஏன் முக்கியம் வாய்ந்தது?

வேலை உலகில் வன்முறை, துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் சர்வதேச தரநிலை இதுவாகும்.

இந்த சமவாயத்தை அமுலாக்குவதன் ஊடாக பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்துவிதமான துன்புறுத்தல்களை சட்டரீதியில் தடுக்க முடியும்.

தொழிலாளர்கள் பணியிடங்களிலும், பணிக்கு செல்லும் போது மற்றும் பணிமுடிய வீடு திரும்பும்போது இடம்பெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகளை இல்லாதொழித்து பாதுகாப்பான வேலையுலகை உருவாக்க வேண்டும் என்பதே இச்சமயவாயத்தின் நோக்காகும். துன்புறுத்தல்கள் வன்முறைகள் என்கிறபோது, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள், நடைமுறைகள் அல்லது அச்சுறுத்தல்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயல் அல்லது நிகழ்வு மீண்டும் மீண்டும் இடம்பெறல், உடல், உளவியல், பாலியல் அல்லது பொருளாதார ரீதியாக தீங்கு விளைவித்தல், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் எனக் கொள்ளலாம். 'பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் 'என்பது நபர்களை நோக்கிய வன்முறை மற்றும் துன்புறுத்தல் என வரையறுக்கப்படுகிறது. அதாவது, பால்நிலையை காரணம் காட்டி துன்புறுத்துதல், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நோக்கிய துன்புறுத்தல்கள் வன்முறைகள் என்பனவாகும்.

இந்த சமவாயத்தின் மூலமாக அங்கத்துவ நாடுகள் வன்முறையை ஒழிப்பதற்கு ஒழுங்கு விதிகளை அமைத்துக்கொள்வதற்காக சேவை வழங்குனர்களும், ஊழியர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பணியிடத்தில் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் பணியாற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட ஏனைய முறைசாரா தொழிலாளர்களும் C190 சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இது அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு முக்கிய சமவாயமாக கருதப்படுகிறது. குறை வருமானம் பெறும் மற்றும் மாற்றுப்பாலின தொழிலாளர்கள் ஆகியோருடைய அனுபவங்களை பிரதிபலிப்பதாகவும் இந்த சமவாயம் அமைந்துள்ளது.

மிக வலுமிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பெண்ணியவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என அனைவரும் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகளினூடாக பாகுபாடு, ஓரங்கட்டல் மற்றும் அடக்குமுறை என்பன எவ்வாறு வேலையுலகில் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் என்பவற்றுக்கு மூல காரணமாக அமைகின்றன என்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உருகுவே (ஜூன் 2020) பிஜி (ஜூன் 2020), நாம்பியா (டிசம்பர் 2020), ஆர்ஜென்டீனா (பெப்ரவரி 2021), சோமாலியா (மார்ச் 2021) மற்றும் ஈக்குவடோர் (மே 2021) ஆகிய நாடுகள் இதுவரை ஊ190 சமவாயத்தை தமது நாடுகளில் நிறைவேற்றியுள்ளன.. சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் தேசிய நிறைவேற்றல் நடவடிக்கைளை பூர்த்தி செய்துள்ளன. எனினும் அந்நாடுகள் இரண்டும் இதுவரை உத்தியோகப்பூர்வ ஆவணங்களை உலக தொழிலாளர் தாபனத்திற்கு அனுப்பவில்லை.

தொழிலாளர் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு கண்ணியமான வேலையை வழங்குவதற்குமான சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் C190 சமவாயத்தை இலங்கை அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை அதனால் இலங்கையில் தொழிலளர்களுக்கு அதாவது கண்ணியமான தொழில்வாய்ப்பை வழங்குவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் தொழில் வழங்குனர்கள் அதனை உறுதிப்படுத்தாத படசத்தில் இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகிபாகத்ததை தனிநபருக்கு, சிவில் சமூகத்திற்கு தொழிற்சங்கங்களுக்கு சரிவர செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் சர்வதேச தொண்டு நிறுவனமான சொலிடாரிட்டி சென்ரர் முன்னெடுத்துள்ள முயற்சிகளின் பயனாக இலங்கையில் C190 சமவாயத்தை நிறைவேற்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக கடந்த மார்ச் மாதம் குறித்த சமவாயத்தை இலங்கையில் நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றில் இவ்விடயம் தொடர்பான உரையை நிகழ்த்தியுள்ளார். இலங்கையில் ஊ190 பரிந்துரையை புதிய சட்டமாக நடைமுறைப்படுத்துவதாயின் பல ஆண்டுகள் செல்லக்கூடும் என்றநிலையில் நாட்டில் ஏற்கனவே உள்ள தொழிலாளர் சட்டத்திற்குள் இதனை உள்வாங்க முடியுமா என்பது தொடர்பிலும் தொழிற்சங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கையில் C190 சமவாய அமலாக்கம் குறித்து எமது இணையதளத்திற்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், பால்நிலை சமத்துவம் மற்றும் முரண்பாட்டுக் கூருணர்வு நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளருமான வீரசிங்கம் கீழ்வரும் விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

சுமார் 9,000,000 (தொழில் என்று அங்கீகரிக்கப்பட்ட) தொழிற்படையை கொண்ட இலங்கையில் பெண்கள் 34.75% காணப்படுகின்றனர். இப்பெண்கள் உட்பட சில ஆண்களுக்கும் ஏற்படும் வேளைத்தள பாரபட்சம் பாலியல் தொல்லை பாதுகாப்பற்ற வேலைச் சூழல் தொடர்பில் அக்கறை செலுத்தாத அரசாங்கம் தொழில் என்று அங்கரிக்காத வீட்டுவேலை பணியாளர்கள் இலங்கையில் சுமார் 87,000 பேர் இருப்பதாக அதிலும் 60,400 பெண் தொழிலாளர்கள் இருகப்பதாக தொழிற்படை சம்பந்தமான 2007 ல் நடாத்தப்பட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் இதனை விட மோசமான வேலைச் சூழலியேயே தொழில் புரிகின்றனர் .

இந்த C190 சமவாயத்தை அங்கீகரிக்கததன் காரணமாக முறைசாரா துறைகளில், தனியார் துறைகளில் இடம்பெறும் இந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. C190 சமவாயத்தை அரசு அங்கீகரிப்பதன் ஊடாக பெண் ஊழியர்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். – என்று தெரிவித்திருந்தார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் C190 சமவாயத்தை இலங்கையில் பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் துன்புறத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் தாமதிக்காமல் அனைவரும் ஒன்றிணைவோம்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image