பால்நிலை சமத்துவத்தை சமூக அபிவிருத்திக்கான ஒரு குறிக்காட்டியாக பார்க்க வேண்டும்

பால்நிலை சமத்துவத்தை சமூக அபிவிருத்திக்கான ஒரு குறிக்காட்டியாக பார்க்க வேண்டும்

பால்நிலை சமத்துவத்தை சமூக அபிவிருத்திக்கான ஒரு குறிக்காட்டியாக பார்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தின் பேராசிரியர் சிவானி சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.

 
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் பிரசாரத்தை முன்னிட்டு எமது இணையதளத்திற்கு  வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
 
இன்று எமது சமூகத்தில் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றோம். இப்பிரச்சனைக்கான தீர்வை ஒருவராலோ அல்லது ஒரு குழுவினராலோ காண முடியாது. ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து பல பங்குதார்கள் ஒன்றாக இணைவதன் மூலமே இந்த பிரச்சனைக்கான தீர்வை நாங்கள் காண முடியும். 
 
உண்மையில் பால்நிலை சமத்துவம் என்பது தனியே பேச்சளவில் அல்லது எழுத்தளவில் மட்டும் நின்று விடாது, ஆண்களுக்கும், பெண்களுக்குமான போட்டியாக பார்க்கப்படாது, உண்மையான சமூக அபிவிருத்திக்கான ஒரு குறிக்காட்டியாக பார்க்கப்பட வேண்டும். பால்நிலை சமத்துவம் என்பது தனியே பெண்களுக்கானது மட்டுமல்ல. இது இருபாலருக்கும் பொதுவானது. 
 
நிலைபேறான சமூக அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்ற எந்த ஒரு தேசமும் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை மையப்படுத்திதான் செயல்பட வேண்டும். உண்மையில் மிக உயர்ந்த கல்வி மற்றும் பதவி நிலைகளில் உள்ளவர்கள் மத்தியில் கூட சமத்துவம் ஒப்புரவு என்பதை கண்டு கொள்ள முடியாத இன்றைய சூழலில், கல்வி அறிவற்ற மக்களிடம் இருந்து இவற்றை எதிர்பார்ப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
கடுமையான சட்டம் தண்டனைகளுக்கு அப்பால் சுய ஒழுக்கம், கலாசாரத்தை ஒட்டி வாழுதல், விழுமியங்களை பேணுதல் எதிர்ப்பாலாரை மதிக்கக்கூடிய நல்ல மனப்பாங்கினை உருவாக்குதல் என்பனவற்றின் ஊடாகத்தான் நாம் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உருவாக்க முடியும். 
 
உண்மையில் பிள்ளைகளுக்கு சிறுபிராயத்தில் இருந்தே பால்நிலை ஒப்புரவு சார்ந்த கல்வியை வளர்த்து அவர்களது மனப்பாங்கை மாற்றி இந்த சமூகத்தை முன்னேற்றுவதற்கு நாம் எல்லோருமே இணைந்து செயல்பட வேண்டும். இன்று பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த சமூகத்தை ஒழுங்கு படுத்துவதற்கு வன்முறைகளை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமூக வளர்ச்சியை உருவாக்குவதற்கும் ஒன்றிணை வேண்டும்.
 
தான் பணிபுரிகின்ற இடத்தில் எதிர்பாலாரை மதித்து பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவை நிலைநாட்ட கூடிய, வன்முறைகளை குறைப்பதற்கான பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும். எல்லோரும் ஒன்று படுவோம் எல்லோரும் இணைவோம். எமது சமூகத்தை மாற்றி அமைப்பதற்கும் சீர்திருத்தத்திற்கும், வன்முறைகளை ஒழிப்பதற்குமான கரங்களாக இணைந்து முன்னோக்கி செல்வோம். - என்றார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image