Image

ஆசிரியைகளின் ஆடை விவகாரமும் - ஏற்பட்டுள்ள சமகால நிலைமையும்

ஆசிரியைகளின் ஆடை விவகாரமும் - ஏற்பட்டுள்ள சமகால நிலைமையும்

ஆசிரியைகளின் ஆடை விவகாரம் தற்போது சமூகத்தில் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து கடந்த 21 ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூவளைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் தமது புகைப்படங்களை இலகு ஆடைகள் அணிந்தாவாறு சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேலை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக வேறு உடைகள் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

ஆசிரியைகள் பலர் இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் (22) நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் அரச சேவையாளர்களுக்காக பொது நிர்வாக அமைச்சு விடுத்த சுற்றறிகையில், இலகுவான ஆடைகளை அணிந்து வருவது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அரச சேவையாளர் என்ற வகுதிக்குள் ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக கூறிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த விடயத்தில் பொதுநிர்வாக அமைச்சின் விளக்கத்தை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். 

சேலை அணியாமல் சாதாரண ஆடையில் பாடசாலைக்கு சமூகமளித்த சில ஆசிரியைகளுக்கு எதிராக கல்வி அமைச்சரின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியைகள் பாடசாலைக்கு செல்லும்போது, சேலை அல்லது ஒசரி அணிவதே, சட்ட ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது.

அந்த நடைமுறையினை சீர்குலைப்பது சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவையாக உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவிடம், வினவியபோது, ​​அரச அலுவலகங்களில் பணிபுரிய வரும் ஊழியர்கள் தொடர்பிலேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.   பெண் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்படும் எனவும் அது அரச நிர்வாக அமைச்சுக்கு பொருந்தாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறிருப்பினும், ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக ங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

“அரசு ஊழியர்கள் அவர்களுக்கு வசதியான உடையில் பணிக்கு வரும் வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது என்று சொன்னால், அது பொதுவான முடிவாக இருக்க வேண்டும். ஆடை விடயத்தில் வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது. எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால், நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம். தற்போது உள்ளதை அப்படி மாற்ற முடியாது. இப்போது சேலை அணிவதில் வெளிப்படையாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்திலும் எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவித நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர்களுக்கு சீருடை கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும். ஆசிரியைர்கள் விரும்பி சேலை அணிவார்கள். அது பிரச்சினை இல்லை. இது கட்டாயமாக்கப்பட்டால், நாங்கள் நிச்சயமாக கொடுப்பனவை பெறுவோம்." - என்றார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image