அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க அரசியல் கட்சிகளுடன் தொழிற்சங்கங்கள் பேச்சு

அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க அரசியல் கட்சிகளுடன் தொழிற்சங்கங்கள் பேச்சு

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பரந்த கூட்டணியை உருவாக்க தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது.

இதன் முதற்கட்டமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது. 

295094167_140176975359811_8641675457764580586_n.jpg

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா சக்திவேல் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்புகளில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்,

நாட்டில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மிகவும் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் 104 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்குமுறை மூலம் இதனை அடக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது.

295360992_140216972022478_3847402790914476167_n.jpg

 

மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து வருந்தவர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் இவை அனைத்திற்கும் அப்பால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன்பின்னர் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றார். சட்டத்தரணிகளை தாக்கினர். ஊடகங்களை தாக்கினர். ஊடகவியலாளர்களை தாக்கினர்.

எந்தவிதமான மக்கள் ஆணையற்ற ரணில் விக்ரமசிங்க தான் இதனை செய்துள்ளார். இவர்கள் அடக்குமுறையை முன்னோக்கி கொண்டு செல்ல பார்க்கின்றனர். நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டது. முப்படையினரும் நாடு முழுவதும் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இராணுவத்தினருக்கு முழுமையாக  பொலிஸாரின் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் தீவிரவாதம் இருக்கின்றதா? மக்கள் கருத்தை அடக்கவே இவர்கள் தயாராகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டின் தொழிற்சங்கங்களுக்கு மாத்திரம் இதனை நிறுத்த முடியாது. எனவே தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு என்ற அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து உடனடியாக இந்த அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

இதற்கமையவே நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட எதிர்க்கட்சி தரப்பினரையும் சந்தித்தோம். இந்த அடக்குமுறைக்கு எதிராக பரந்த கூட்டணியை அமைத்து உடனடி செயற்பாடுகளுக்கு செல்வதற்காக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இவ்வாறான அடக்குமுறைக்கு அனுமதியளிக்க முடியாது.

மக்களின் ஜனநாயக உரிமை, கருத்து சுதந்திரம், எதற்கும் முன்னிற்றல் என்ற அனைத்தையும் நசுக்கி இராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையினரையும், விசேட அதிரடிப் படையினரையும், பொலிஸாரையும் பயன்படுத்தி இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் எங்கே? இதற்கு எதிராக நாம் பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டும். அதுவே எங்களுடைய ஒரே நோக்கமாகும். அதன் அடிப்படையிலேயே நாங்கள் இன்று எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தோம். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image