நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கைதுகளுக்கு தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகள் கண்டனம்!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம், இந்த கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
கடந்த 20ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் தொழிற்சங்க மற்றும் வெகுஜன் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை கூட்டாக வலியுறுத்தினர்.
கடந்த 9ஆம் திகதி கோட்டா கோ கம யில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டத்தின் மீது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமையுடன், சந்தேக நபர்களாக குறிப்பிட்டு இதுவரையில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று, தாக்குதல் நடத்தியவர்கள் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடியிருந்ததுடன் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 2 மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். எனினும் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் இடம்பெறுகின்ற கைதுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன் அமைப்புகளின் ஒன்றியம் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த ஊடக சந்திப்பில் நடத்துகின்றோம். கடந்த 9ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம முதலான போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 1056க்கும் அதிகமானோர் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
எனினும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் ஆனந்த விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கைதுகளானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல்வேறு செயற்பாட்டாளர்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன.
இது முழுமையான சூழ்ச்சியான நடவடிக்கையாகும். இந்தப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அலரிமாளிகையில் கூட்டத்தை வழிநடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. அதேநேரம் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் இவை இடம்பெற்றன. ஆனால் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் ஒரு அபாயமான நிலையாகும்.
இந்த நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் செயல்படும் செயற்பாட்டாளர்களை தேடித்தேடி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது முழுமையாக தவறான செயற்பாடாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் என்ற அடிப்படையில் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். - என்றார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்கள் மற்றும் பகுஜன் அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதியான எச் எம் கே ஹேரத்,
கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெறுகின்றன. இந்த அரசாங்கம் செல்லும் பயணம் மிகவும் தவறானதாகும். பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஊடாக வந்த ஒரு உறுப்பினரை பிரதமராக நியமித்து தற்போது அந்த பிரதமர் பொதுஜன பெரமுனவின் பிரதமராக இருக்கின்றார். பொதுஜன பெரமுனவிலிருந்து சுயாதீனமான தரப்பினரும் இன்று அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றிருக்கின்றன. சர்வகட்சி அரசாங்கம் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்று முழுமையாக இது பணத்துக்கு விற்பனை செய்யப்படும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதாக இருக்கின்றது. இது முற்று முழுதாக டீல் அரசாங்கமாகும். இந்த டீல் அரசாங்கத்தின் மூலம் இந்த நாடு எதிர்பார்க்கின்ற எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இந்த கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாம் இதனை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - என்றார்.
அதேநேரம், அத்தியாவசிய அரச ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களை இன்று (20) முதல் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அழைப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பிரச்சினை தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் தம்மிக்க முனசிங்க மற்றும் சஞ்ஜீவ பண்டார ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனூடாக எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.