போராட்டம் 100% வெற்றி: அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு விசேட அறிவித்தல்

போராட்டம் 100% வெற்றி: அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு விசேட அறிவித்தல்

இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது.

இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கல்வி அமைச்சுக்கு சென்று கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் இன்று சுமார் 10000 பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும், ஆசிரியர் ஆலோசகர்கள் அனைவரும் சுகயீன விடுமுறை அறிக்கையிட்டு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு நாங்கள் கூறியிருந்தோம். இந்த நடவடிக்கை இன்று மிகவும் வெற்றியளித்துள்ளது. அனைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் சுகயீன விடுமுறை அறிக்கையிட்டுள்ளனர். இந்த நிலைமைக்கு மத்தியில் பெற்றோர்கள் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பவில்லை.

இன்று கல்வி கட்டமைப்பு மிக மோசமடைந்து இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு போக வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான கோரிக்கையாகும். இலங்கையின் அனைத்து திசைகளிலும் இருந்து மக்கள் வெளியே வந்து இந்த அரசாங்கம் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்கின்றனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசாங்கத்துக்கு எந்த இயலுமையும் இல்லை. இந்த ஆட்சியின் காரணமாக மக்களுக்கு பாரிய அளவில் வாழ்க்கை சுமை அதிகரித்திருக்கின்றது. கேஸ் இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை. இவற்றுக்கு மாற்று வழி என்ன? எந்த ஒரு மாற்று வழியும் இல்லை.

இந்த நிலைமை கல்வி கட்டமைப்பிற்கு தாக்கத்தை செலுத்தியுள்ளது. எனவேதான் நாங்கள் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இன்று முதலாவது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க தீர்மானித்தோம். எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என அரசாங்கத்தை நாங்கள் கூறுகின்றோம். ஆனால் அரசாங்கத்துக்கு எதையும் செய்ய முடியாது. எனவே அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும். இதனால் ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி கட்டமைப்பும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் ஒரே நேரத்தில் வழங்கப்படவில்லை. சீருடை வழங்கப்படவில்லை. பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான வசதியில்லை. எந்த ஒரு ஒதுக்கீடுகளும் பாடசாலைகளுக்கு இல்லை. இந்த சுமையை தாங்கி கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் 28ஆம் திகதி நாங்கள் மாபெரும் பகிஸ்கரிப்பு அழைப்பு விடுக்கின்றோம். இந்த பணி புறக்கணிப்பு இலங்கையில் அரச சேவை, அரசசார்பற்ற, தனியார் மற்றும் பகுதி நிலை அரச சேவை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் இந்த பணி பகிஷ்கரிப்பில் பங்கேற்பார். 28 ஆம் திகதி மாபெரும் ஒரு வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் இன்று நாங்கள் வழங்கிய செய்தியை தெரிந்துகொண்டு 28 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினராகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த நடவடிக்கை எடுப்போம். அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தை 28ஆம் திகதி நாங்கள் ஆரம்பிப்போம். நீங்கள் நன்றாக செய்துள்ளீர்கள். இது நன்றாக போதும். எனவே உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம்.

இன்று ஒரு சவர்க்கார கட்டி 200 ரூபாய் வரையில் விலை அதிகரித்திருக்கின்றது. எவ்வாறு வாழ்வது? மாணவர்களை கற்பிக்க வைப்பதற்கு பெற்றோர்களுக்கு முடியாத நிலை. இன்று மாணவர்கள் மிகவும் பலவீனமடைந்து நிலையிலேயே பாடசாலைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான வசதியும் இல்லை. எனவே இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்த மக்களுக்கானது, பிள்ளைகளுக்கானது. நாங்கள் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். கடந்த 16ஆம் திகதி நாங்கள் பேரணி ஒன்றை நடத்தினோம். 20ஆம் திகதி கருப்பு நிற உடை அணிந்து போராட்டம் செய்தோம். ஆயினும் அரசாங்கம் இதனை புரிந்து கொள்ளவில்லை. எனவே இன்றைய தினம் நாங்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு செய்திருக்கின்றோம்.  ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்திற்கு செல்வதற்கு முன்னர் அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க,

Mahindajaya.jpg

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த நாட்டில் 10000 பாடசாலைகளில்  இன்று சுகயீன விடுமுறை அறிக்கையிடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இது நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியளிதுள்ளது. இனிமேலும் இந்த மக்கள் மீது பாரிய சுமையை சுமத்தாமல் இந்த  அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற செய்தியை நாங்கள் இன்று வழங்கி இருக்கின்றோம். நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு செய்தி ஒன்றை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

காலிமுகத்திடலைசுற்றி அரசாஙகம் தடைகளை ஏற்படுத்துகின்றது. இந்த மக்கள் எழுச்சியை தடுக்க முயற்சிக்கின்றது. இது தடுக்கக்கூடிய பேரெழுச்சி அல்ல. இது சுனாமி போன்ற மக்களின் பேரெழுச்சியாகும். இதனை தடைகள் மூலம் நிறுத்த முடியாது. இன்று இந்த நாட்டின் ஆசிரியர் அதிபர்கள் முழு நாட்டு மக்களுக்கும் கூறிய செய்தியானது, இந்த அரசாங்கம் வீட்டுக்கு போகவேண்டும் என்பதாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரிய அதிபர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மாணவர்கள் தினந்தோரும் பாடசாலைக்கு வரவேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இன்றைய தினம் நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். இன்று பாடசாலை மாணவர்களுக்கான வேன் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 4000 ரூபாய் 12,000 ஆகவும், 3000 ரூபாய் 9000 ஆகி இருக்கின்றது. பஸ் கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றன.

ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளில் அல்லது தங்களது வாகனத்தில் பாடசாலைக்கு வர முடியாது. எரிபொருள் விலை உயர்வுடன் மாதம் 6 முதல் 8 நாட்கள் மாத்திரமே ஆசிரியர்களுக்கு பாடசாலைக்கு வர முடிகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு சாப்பிடுவதற்கு இல்லை.  பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள் தேநீரை குடித்துவிட்டு பாடசாலைக்கு வருகின்றனர். அந்த பிள்ளைகளுக்கு ஒரு தேநீரையும்  இந்த அரசாங்கம் இல்லாமல் செய்திருக்கின்றது. எனவேதான் நாங்கள் இன்று ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற செய்தியை வழங்கி இருக்கின்றோம் ஆனால் இவர்களுக்கு இது கேட்காது.

எனவேதான். எதிர்வரும் 28திகதி இந்த நாட்டின் அரசு தனியார்துறை, தனியார்துறை, தோட்டத் தொழிலாளர் என அனைத்து தரப்பினரையும் இணைந்து ஒட்டுமொத்தமாக ஒரு பணிப்புறக்கணிப்புக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்த பணிப்புறக்கணிப்புக்கும் இவர்கள் செவிசாய்க்காவிட்டால், மே மாதம் 6ஆம் திகதி ஹர்த்தால் பொது முடக்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அதற்கும் பதிலளிக்காவிட்டால் நாங்கள் இந்த நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் இணைத்துக்கொண்டு தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க நாங்கள் தயார். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image