கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் காலக்கெடு: NLAC விசேட தீர்மானம்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்வதற்கு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தலைமையில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் தொழில் அமைச்சர் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமகாலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள், சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் விடயங்களை பெருந்தோட்ட கம்பனிகள் எவ்வாறு மேற்கொள்கின்றன என்பதை முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுக்கு முன்னிலையில்
தொழில் அமைச்சரிடம் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு தொழில் அமைச்சர் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.
அதாவது குறித்த காலப்பகுதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வழமை சம்பந்தமான ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இதற்கமைய உப குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.