1000 ரூபா சம்பள விடயத்தில் அடுத்தக்கட்டம் என்ன? இராதாகிருஷ்ணன்புதிய யோசனை
தோட்டத் தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பளம் என்பது இன்னும் கைக்கு வந்துக் கிடைக்கவில்லை. உண்மையிலேயே ரூபா 750 சம்பளம் கிடைத்தபோது தமக்கு மாதாந்தம் சுமார் ரூபா 20000 சம்பளம் கிடைத்தது.
தற்போது தமக்கு கிடைக்கும் சம்பளமே ரூபா 12000 ற்கும் குறைவு என தோட்ட தொழிலாளர்கள் அங்கலாய்கின்றார்கள் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் அமைந்துள்ள முன்னனியின் தலைமை காரியாலயத்தில் நேற்ற (13) நடந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இந்த ரூபா 1000 சம்பள உயர்வு என்பது ஓர் பூச்சாண்டி காட்டும் நிகழ்வாகவே இருக்கின்றது. வாங்கிக் கொடுத்தவர்கள் சொல்லுகின்றார்கள் வாங்கி கொடுத்து விட்டோம் இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று. இங்கு வாங்கி கொடுத்தது பெரிதல்ல. அது அரசாங்கம் பெற்றுக் கொடுத்தது. எனவே ரூபா 1000 சம்பளம் வாங்கிக் கொடுத்த பிறகு தோட்ட மக்களிடையே காணப்படும் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது எல்லோரும் முன்வர வேண்டும்.
20 கிலோகிராம் பறித்தால்தான் ரூபா 1000 சம்பளம் என்று கூறி தொழிலாளர்களை இம்சைப்படுத்தி மிக மோசமான நிலைக்கு அவர்களை தள்ளி உருவாக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையை இல்லாது செய்வதற்கு வாங்கி கொடுத்தவர்களும் நாமும் என எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.