மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுக்க சங்கிலிப் போராட்டம் - வடிவேல் சுரேஷ்
மலையக மக்களின் இருப்பை பாதுகாக்கவும், தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்.
அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வேன். வண்ணங்களோ, சின்னங்களோ இதில் இல்லை. எனவே, எண்ணங்களுக்காக அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷ் எம்.பி. தலைமையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், தோட்டப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, நாட்டு நிலைவரம் பற்றியும், தொழில்சார் விடயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்ஓர் அங்கமாக நுவரெலியா - நானுஓயா தோட்டப்பகுதிகளில் இன்று (18.02.2022) தெளிவூட்டல் நடவடிக்கை இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மலையக மக்களுக்கு எதிராக அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள், மிகைவரி சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கைவைப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெருந்தோட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம்.
எமது மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும், தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். எமக்கு வண்ணங்களோ, சின்னங்களோ முக்கியமில்லை. மக்களின் எண்ணங்கள்தான் முக்கியம். எனவே, கட்சிபேதமின்றி அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் . எமது மக்களுக்காக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அனைத்து வழிகளிலும் போராடுவேன்.
மிகைவரி சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீதம் அறிவிடும் யோசனை எழுத்துமூலம் முன்வைக்கப்பட்டது. தற்போது அறவிடப்படாது என்ற உறுதிமொழி வாய்மூலம் வழங்கப்படுகின்றது. யோசனையை எழுத்துமூலம் வைத்துவிட்டு, உறுதிமொழியை வாய்மூலம் வழங்குவதை ஏற்கமுடியாது. அதுவும் எழுத்து வடிவில் வேண்டும். இந்த அரசை நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்லர்.
இந்த நாட்டில் மாற்றமொன்று அவசியம். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது. எனவே, முடியுமானால் தேர்தலொன்றை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுக்கின்றோம். அது எந்த தேர்தலாக இருந்தாலும் பரவாயில்லை, நடத்தினால் மக்கள் சக்தி எந்த பக்கம் என்பது தெரியவரும்.
அதேவேளை, மலையகத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் கோதுமை மா நிவாரணம் வழங்கும் நடைமுறை ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பினருக்கும் அது வழங்கப்பட வேண்டும். ஏனையோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கிவிட்டு, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வெறும் 40 ரூபா வழங்கப்படுகின்றது. இதுவும் ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.