VIDEO - கத்தாரில் வாகனம் செலுத்தும்போது கைபேசி பாவித்தலை கண்டறிய புதிய வகை கமராக்கள் அறிமுகம்!
கத்தாரில் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகள் பயன்படுத்துவது, ஆசனப்பட்டி அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தார் உள்துறை அமைச்சின் போக்குவரத்து பொது இயக்குநரகம் அதன் சமூக ஊடக தளங்களில் இதனை அறிவித்துள்ளது. இந்த வகை கமராக்கள், தானியங்கு கண்காணிப்பு வகையைச் சேர்ந்தனை என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
“எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல், போக்குவரத்து பொது இயக்குநரகம், ஆசனப்பட்டி அணியாமை மற்றும் வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு தானியங்கி கண்காணிப்பை செயல்படுத்தும்” என்று கத்தார் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் 24/7 அமுலில் இருக்கும். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வாகன சாரதிகளுக்கு கத்தார் உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து கண்காணிப்பு கமரா தொடர்பாக உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கண்காணிப்பு கமரா தொடர்பான காணொளி
மூலம் - கத்தார் தமிழ்