புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் ஆரம்பகட்டமாக 7 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக வெளிநாட்டுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் அமைந்திருக்கும் தூதரகங்கள் ஊடாக தாமதமின்றி பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச்சான்றிதழ்களை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமான டிஜிட்டல் வசதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு தொழில், சுற்றுலா அமைச்சு ஊடாக செயற்படுத்தப்படும் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச்சான்றிதழ், மரணச் சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை திங்கட்கிழமை (06) முதல் இலத்திரனியல் தொழிநுட்பம் முறைமை ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் தேவையுடன் செயற்பட்டு வந்தன. அதன் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த வாய்ப்பு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைக்கிறது.
உலகம் பூராகவும் பரந்துவாழும் 35இலட்சம் இலங்கை பிரஜைகளுக்கு தங்களின் பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழை நீங்கள் வாழும் இடத்தில் இருந்தே ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.அதேபோன்று உங்களது விவாக சான்றிதழ் மற்றும் உங்களது உறவினர்கள் யாராவது மரணித்தால் அவரின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் தற்போது இலங்கைக்கு வரவேண்டிய தேவையில்லை.
இது பல வருடங்களாக இருந்துவந்த திட்டமாகும். என்றாலும் செயற்பாட்டில் வரவில்லை. இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த புதிய அரசியல் தலைமையுடன் இந்த அதிகாரிகளுக்கு முடியுமாகி இருக்கிறது. எங்களுக்கு தேவைப்பாடு இருந்தால் செய்ய முடியாத எதுவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ஜனாதிபதியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தில் இது முதலாவது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். அந்த வகையில் ஆரம்பமாக இந்த வேலைத்திட்டத்தை உலகில் 7 நாடுகளில் நேற்று (06) ஆரம்பமானது. எதிர்காலத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும். அந்த வகையில் ஜப்பான், கட்டார், குவைட் தூதரக காரியாலயம் மிலானோ, டொரன்டோ, மெல்பேர்ன் மற்றும் டுபாய் கன்சியுளர் காரியாலயம் ஊமாக இந்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வேலைத்திட்டம் மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு பாரியதொரு வசதி கிடைக்கப்பெறுகிறது. இல்லாவிட்டால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு வந்து, அதற்கு தேவையாக ஆவணங்களை தயாரித்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று தேவையான சேவையை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு நீண்ட நாட்கள் விரயமாக்கவேண்டிவரும். அதேபோன்று அதிக செலவு ஏற்படும். என்றாலும் தற்போது அவர்களின் நேரம், காலம் செலவு அனைத்தும் இந்த வேலைத்திட்டம் மூலம் மீதப்படுத்தப்பட்டுகிறது. சுமார் 22 டொலருக்கு உங்களுக்கு தேவையான சான்றிதழை இருக்கும் இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதேபோன்று ஏனைய சேவைகளையும் இருக்கும் நாட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது திட்டமாகும். அதனையும் நாங்கள் மேற்கொள்வோம். தற்போது எங்களுக்கு இருக்கும் சவால் கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதாகும். அது எங்களது பிரச்சினை அல்ல. இதற்கு முன்னர் எடுத்த பிழையான தீர்மானத்தின் பெறுபேறாகும். கடவுசீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் பல மாதங்களாக சிலர் காத்திருப்பதை நாங்கள் அறிகிறோம்.அதனால் தற்போது நாங்கள் ஒருதொகை கடவுச்சீட்டுக்கு கேள்விக் கோரல் முன்வைத்திருக்கிறோம். மிக விரைவில் கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோன்று பிறப்புச்சான்றிதழ், மரணச்சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமாகி இருப்பது போன்று கடவுச்சீட்டையும் இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக புதுப்பிக்கவும் புதிய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளவும் நாங்கள் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.