புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் - அஷீலா தந்தெனிய

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் - அஷீலா தந்தெனிய

குடும்பத்திற்கான பண அனுப்பல் மூலம் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதியுயர் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பு 'Voice of Migrants Network' தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கைக்கு 4843 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளதாக புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பின் அங்கத்துவ அமைப்பான 'Stand Up Movement Sri Lanka' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷீலா தந்தெனிய தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட இது 11.57 சதவீத வளர்ச்சி என்றும், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியைக் கொண்டு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தைப் பற்றி முந்தைய அரசாங்கங்கள் கருத்திற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான யுத்தம் நடந்தாலும், அந்நியச் செலாவணியை மாத்திரம் சிந்தித்து தொழிலாளர்களை அனுப்பியதுடன், அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்திற்கொள்ளாத நிலையில், லெபனானின் நிலைமை, இஸ்ரேலின் போர் மோதல்கள், மியன்மாரில் உள்ள சித்திரவதை முகாம்கள் போன்றவை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென தந்தெனிய வலியுறுத்தினார்.

பிற நாடுகள் தமது குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தாலும், நமது நாட்டில், அந்த நெருக்கடியான சூழ்நிலைகளைகூட சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்தும் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றதாகவும், புலம்பெயர்ந்தோரைப் பற்றிச் சிந்தித்து அவர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றையும் தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய அரசாங்கமே தற்போது இருப்பதாகவும் தந்தெனிய நினைவு கூர்ந்தார்.

எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய வாக்குறுதியளித்ததை நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி முடிவுகள் எடுக்கப்படும் நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர் தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்று அவர் மேலும் கூறினார்.​

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image