ரஷ்ய - உக்ரைன் போருக்கு ஆட்கடத்தல் தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது!
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.
ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரஷ்ய-உக்ரைன் போரில் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு, எதிராக தராதரம் பாராமல், சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதை முதலில் வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர். எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த ஆள் கடத்தல் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0112 401 146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோருகிறோம். - என்றார்.