இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் - தூதுவர்
இஸ்ரேலில் காணாமல் போயிருந்த இலங்கைப் பிரஜை, உயிரிழந்ததை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, களனி - ஈரியவெட்டிய பகுதியைச் சேர்ந்த அனுலா ரத்நாயக்க என்ற பெண்ணே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலையடுத்து, கடந்த 7ஆம் திகதி முதல் குறித்த பெண் காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில், இஸ்ரேல் காவல்துறை திணைக்களத்தின் சர்வதேச பிரிவு இன்று (17) காலை உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலத்தை பார்வையிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் தங்களிடம் ஒப்படைக்கப்படுமென இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அத்துடன், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம், குறித்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸாவின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் 23 இலங்கையர்களின் பெயர் பட்டியல் எகிப்திலுள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்