வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக செயற்பாடுகளில் பல நிர்வாக சிக்கல்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக செயற்பாடுகளில் பல நிர்வாக சிக்கல்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாடு தொடர்பான பல நிர்வாக சிக்கல்கள் கோப் குழுவில் வௌிவந்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் கடந்த 08ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) ஆராயப்பட்டது.

இதில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள 21 அடிப்படை விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
 
01) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பான சட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை காலத்துக்கு ஏற்ற வகையில் திருத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக செயற்படும்போது பணிப்பாளர் சபைக்கு வெளிநாட்டு சேவை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேரை பணிப்பாளர் சபைக்கு நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
 
02) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்திற்கமைய உப தலைவர் பதவி இருக்கக்கூடாது என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தபோதும், அமைச்சரினால் வழங்கப்பட்ட நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், அத்தகைய நியமனம் குறித்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார். கடந்த காலத்தில் மேற்படி பதவியை வகித்தவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்ட ரீதியானவை இல்லை என்றும் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.
 
03) பணியகத்தின் சுருக்கமான திட்டத்தைப் புதுப்பித்து இரண்டு மாதங்களுக்குள் அதனைக் சமர்ப்பிக்குமாறும் கோப் குழு, பணிப்பாளர் சபைக்கு உத்தரவிட்டது. அதேசமயம், வியூகத் திட்டம், செயல் திட்டம் மற்றும் பெருநிறுவனத் திட்டம் என்பன இதில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
 
04) பணியாளர்களின் நலன்புரி நிதியத்தை தனியான கணக்காகப் பேணுதல் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நிதி கணக்காய்வுக்கு உட்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இந்த நிதியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நிதி அதிகாரியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பணிப்பாளர் சபைக்கு எடுத்துக் கூறி, பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை இரண்டு மாதங்களுக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
 
05) முன்னைய அமைச்சரவைப் பரிந்துரையின் பிரகாரம், விசாரணைகளுக்காக பொலிஸாரை பணியகம் பயன்படுத்தியிருந்தபோதிலும், அது தற்போது நடைமுறைப்படுத்தப்படாததால், விசாரணைப் பணிகளில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. குறித்த அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடுமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறான தேவை இல்லை என்றால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
06) பல்வேறு முறைகேடுகள் குறித்து கணக்காய்வாளர் நாயகம் அல்லது அமைச்சு மட்டத்திலோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மட்டத்திலோ வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் குற்றவாளிகளை தண்டிக்காதது குறித்தும், பணிப்பாளர் சபையின் தீர்மானங்களின்படி அவர்களை விடுதலை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொது நிர்வாக அமைச்சின் ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் ஆதரவுடன் முறையான ஒழுக்காற்று விசாரணையை நடத்தி ஒரு மாதத்திற்குள் கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
 
07) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதி வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிழைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்திடம் இருந்து விசேட அறிக்கை கோரப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்குவது தொடர்பான சுருக்கமான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.
 
08) உத்தியோகபூர்வ அனுமதியின்றி பணியகம் மேற்கொண்ட செலவினங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை திறைசேரியின் பிரதிநிதியை ஒருங்கிணைத்து எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய சுருக்கமான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் கோப் குழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
 
09) நிதி அமைச்சின் பிரதிநிதிகளாகப் பல்வேறு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்படும் நபர்களைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் நியமிக்குமாறும் திறைசேரியின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
 
10) வெளிநாட்டுத் தூதரகங்களில் தொழிலாளர் நலன்புரிச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் தொடர்பில் உள்ளக கணக்காய்வாளரினால் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோப் குழு பரிந்துரைத்துள்ளதுடன், அந்த அறிக்கையை அமைச்சின் செயலாளரினால் கோப் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
11) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமானோர் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றாலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் சமூக நெருக்கடி உருவாகி வருவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, பயிற்சிக்காக அனுப்பப்பட்டு வெளிநாடு செல்லத் தயாராகும் பணியாளர்கள் குறித்த முழுமையான அறிக்கையை வழங்குமாறு பணியகத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த பரிந்துரைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில் மூன்று மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை மீண்டும் அழைப்பதற்கும் குழு முடிவுசெய்தது.
 
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, கௌரவ லொஹான் ரத்வத்த, சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, நளின் பண்டார ஜயமஹா, ரோஹினி குமாரி விஜேரத்ன, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார, சட்டத்தரணி பிரேம்நாத் சி. டொலவத்த, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, எம்.ராமேஸ்வரன், ராஜிகா விக்கிரமசிங்க, சட்டத்தரணி மதுர விதானகே மற்றும் (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
மேலும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image